உதம்பூர் :ஜம்மு – காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து பஸ்கள் சேதம் அடைந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில், உதம்பூர் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், நேற்று அதிகாலை ௫:௩௦ மணியளவில் திடீரென குண்டு வெடித்தது.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பஸ்சின் மேற்கூரை மற்றும் பின்பகுதி கடும் சேதமடைந்தது. இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொரு பஸ்சிலும் குண்டு வெடித்தது. நேற்று முன்தினம் இரவு டொமெய்ல் சவுக் பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த பஸ்சிலும் குண்டு வெடித்தது. இதில், இரண்டு பேர் காயமடைந்தனர். ”இந்த குண்டு வெடிப்பில் மூன்று பஸ்கள் சேதமடைந்துள்ளன.
இது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கு முன் விழிப்புடன் இருக்க போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது,” என, உதம்பூர் டி.ஐ.ஜி., சுலேமான் சவுத்ரி தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செல்ல உள்ள நிலையில், இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஏற்கனவே, அவர் செப்., ௩௦ம் தேதி காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். பின், அவரது பயணம் அக்., ௪ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement