குன்னூர்: குன்னூரில் நேற்று அதிகாலை ஹோம் மேட் சாக்லேட் தொழிற்சாலையில் புகுந்த கரடி, 2 கிலோ சாக்லேட்டை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு மற்றும் கோவில்களில் உள்ள விளக்குகளில் ஊற்றும் எண்ணெய்யை குடிக்கவும் வருகின்றன.
நேற்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள ஹைபீல்டு சாக்லேட் தொழிற்சாலை பகுதிக்கு கரடி ஒன்று வந்தது. நுழைவாயில் கேட் மீது ஏறி உள்ளே குதித்த கரடி, அங்கிருந்த 2 கிலோ சாக்லேட்களை ருசித்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.