சென்னை : ‘நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில், குப்பை கிடங்குகளுக்கு அனுமதி அளிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும்’ என, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி உச்சிமேடு ஏரியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கழிவுகள் கொட்டப்படுவதாக, உச்சிமேடு ஏரி சங்கம், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளை, குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்த, மாசு கட்டுப்பாட்டு குழு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ‘உச்சிமேடு ஏரிப் பகுதியில், குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு, குருமாம்பேட் குப்பை கிடங்கிற்கு மாற்றும் பணி இந்தாண்டு ஜூலை 21ல் நிறைவடைந்துள்ளது. தற்போது, உச்சிமேடு ஏரி பகுதி, சுத்தமாக உள்ளது.’தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அறிக்கை அளித்துள்ளார்.விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவை தீர்ப்பாயம் பாராட்டுகிறது. அதே நேரத்தில், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் குப்பை கொட்டும் இடம் அமைக்க அனுமதி வழங்கும் முன்பு, மாசு கட்டுப்பாட்டு குழு கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement