மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் சாலக்குடி அதிரப்பள்ளி வனப்பகுதியில் தாயுடன் இரண்டு குட்டி யானைகள் நடமாடும் காட்சி யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரே உயரத்தில், ஒன்று போல் காட்சியளிக்கும் இரு குட்டியானைகளும் தாயுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு குட்டி யானைக்கு மட்டும் தந்தம் சற்று நீளமாக உள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இதே வனப்பகுதியில் தாய் யானையுடன் இந்த இரு குட்டியானைகளையும் வனத்துறையினர் பார்த்துள்ளனர். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தாயுடன் இரண்டு குட்டி யானைகளும் வலம் வருவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்,
இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், விரிவான ஆய்வுக்கு பின்னர்தான் இரண்டு குட்டி யானைகளும் இரட்டையர்களா? என தீர்மானிக்க முடியும். மேலும் வேறு யானைகள் எதுவும் இந்த கூட்டத்துடன் பார்க்க முடியவில்லை. யானைகளை பொறுத்தவரை இரண்டு குட்டிகள் ஈன்றெடுப்பது அபூர்வ நிகழ்வாகும். தாய் யானையுடன் ஒரே உயரத்தில் காணப்படும் இந்த இரண்டு குட்டி யானைகளும் இரட்டையர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றனர்.