சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் குறித்து ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது, இந்த வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது கோடநாடு பங்களாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை காவல்துறை விசாரணை செய்துகொண்டிருக்கும் வேளையில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் பல துயர சம்பவங்களும் நடைபெற்றது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆட்சி மாறியதும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழகஅரசு ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தனிப்படையினர், இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றதாக வும் போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான் சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோடநாடு வழக்குகளை தனிப்படை விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.