கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பாக நீலகிரி மாவட்டம் ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. விசாரணையில் மனோஜ், சயன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயன் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
