மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017, ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்த கும்பல், இந்த சம்பவத்தின்போது காவலாளியாக இருந்த ஓம் பகதூரை கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜெம்சீர் அலி, சந்தோஷ் சாமி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேநாளில் 2வது குற்றவாளி சயான், குடும்பத்தினருடன் கேரளாவில் சாலை விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் சயான் உயிர்தப்பிய நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தை பரிதாபமாக இறந்தனர். பின்னர், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கோடநாடு எஸ்டேட்டில் கணிணி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்ததால், சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்டேட் மேலாளர் நடராஜன், எஸ்டேட் பங்குதாரர் விவேக் ஜெயராமன், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்த வழக்கு அக். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தனிப்படைகள் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி காவலர்களுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.