புதுடெல்லி: சிபிஐ, என்சிபி மற்றும் மாநில போலீசார் இணைந்து நாடு முழுவதும் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக, நாட்டில பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி இருக்கின்றன. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் தொடர்பு கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டறியவும், போதை பொருள் கடத்தலை தடுக்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) மற்றும் மாநில போலீசார் இணைந்து ‘ஆபரேஷன் கருடா’ என்ற பெயரில், சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அதிகளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் தொடர்பு இருப்பதாாக சந்தேகிக்கப்டும் 6,600 நபர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். மேலும், போதை பொருள் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள் பதிவு செய்யப்ப ட்டு, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.