சிறைச்சாலைகளில் தன்பாலின ஈர்ப்பும், தன்பாலின வன்கொடுமைகளும் அதிக அளவில் நடப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கே.எம்.பீமா கோரேகான் வழக்கில் சிறையிலிருக்கும் கவுதம் நவ்லகா என்பவரை உடனடியாக மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றுமாறு தலோஜா சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நவ்லகா `மீண்டும் சிறைக்கு அனுப்பாமல், சிறையிலிருந்து வெளியே செல்ல வேண்டும்’ எனவும், அதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கான காரணமாக சிறையில் பாலியல்ரீதியிலான பல குற்றங்கள் நடப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிபதிகள் ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள், “சிறைச்சாலைக்குச் சென்ற நாங்கள், அங்கு அளவுக்கு அதிகமான கைதிகள் இருப்பதை அறிகிறோம். சிறைச்சாலைகளில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் தன்பாலின ஈர்ப்பு வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்துவருகின்றன.
அதனால், சிறையிலிருந்து கைதிகள் வெளியே வரும்போது அவர்களை வீழ்த்திய சமூக அமைப்புக்கு எதிரான பழிவாங்கல் சிந்தனைகளால் நிரப்பப்படுவார்கள். இது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், சிறைச்சாலைகளை நடத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்துமாறு பரிந்துரைக்கிறோம். இது சிறைகளின் நிலைமையை மேம்படுத்த உதவும். மேற்குலகம் அத்தகைய மாதிரிகளை ஏற்றுக்கொண்டதை நாம் அறிவோம். தனியார் சிறைச்சாலைகள் என்ற கருத்து வெளிநாட்டில் நடைமுறையில் இருக்கிறது.
அரசின் நிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறைக் கட்டமைப்பை மேம்படுத்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்தலாம். ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் சிறைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. அந்த நாடுகள் சிறைக்கைதிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குகின்றன. `யாரும் குற்றச் சிந்தனைகளிலிருந்து மீட்பதற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை’ என்பதே அவர்களின் கருத்து. சிறைக்குச் சென்று வந்தது கலநிலவரங்களின் உண்மைகளை புரிந்துகொள்ள ஒரு நல்ல அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தனர்.