டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் ஜூலை 22-ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்காக பெற்றுக்கொண்டார். அவருடன் அவரது மனைவி ஜோதிகாவும் விழாவில் கலந்துகொண்டார்.
இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று), சிறந்த திரைக்கதைக்கான விருதை ஷாலின் உஷா நாயர், சுதா கொங்கரா (சூரரைப் போற்று) மற்றும் மடோன் அஸ்வின் (மண்டேலா) பெற்றுக்கொண்டனர். அத்துடன் சிறந்த வசனகர்த்தா மற்றும் அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதும் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படமாக தேர்வாகிய ‘சூரரைப்போற்று’ படத்தினை தயாரித்த 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஜோதிகா பெற்றுக்கொண்டார்.
மேலும், வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் சிவரஞ்சனியாக நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார். தமிழில் சிறந்த படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் தேர்வாகியதை அடுத்து அந்தப் படத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
‘Tanhaji: The Unsung Hero’ என்ற படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கான் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார். அத்துடன் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த பிஜூ மேனன் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதேபோல் இந்தப் படத்தில் பாடிய பழங்குடியினர் பாடகி நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.
அல்லு அர்ஜூனின் ‘ஆலோ வைகுந்தபுரம்லோ’ படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தமன் பெற்றுக்கொண்டார்.