சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
கொலீஜியம் என்பது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே ஆகும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அண்மையில் கூடியது. இந்தக் கூட்டத்தில், ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த எஸ்.முரளிதர்?
மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முடித்து, அதன் பிறகு, எஸ்.முரளிதர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தார். நீதிபதி எஸ்.முரளிதர் அரசியலமைப்பு சட்டம், அரசு நிர்வாக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட நீதிபதி எஸ்.முரளிதர், 2006 மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். பின்னர் 2020 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.