விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வீரனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (39). இவர் கடந்த 25.10.2015-ம் ஆண்டு சென்னை, காரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அதே பாருக்கு வந்த இன்னொரு கும்பலுக்கும் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உருட்டுக்கட்டையால் தாக்கி பாண்டியன் கொலைசெய்யப்பட்டார். இது குறித்து டாஸ்மார்க் மேற்பார்வையாளர் சிவா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாண்டியனைக் கொலைசெய்தது திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற கத்தி உதயகுமார் (33), அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதிபாசு (41) எனத் தெரியவந்தது. உதயகுமார், டிகிரி படித்துவிட்டு சென்னையில் வேலைப்பார்த்திருக்கிறார். அதைப் போல ஜோதிபாசும் சமையல் தொடர்பான வேலையை செய்து வந்திருக்கிறார். இதையடுத்து இருவரையும் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்போது ராயப்பேட்டை உதவி கமிஷனராக இருக்கும் சார்லஸ் சாம் ராஜதுரை தலைமையிலான போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை தற்போதைய வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் தலைமையில் தலைமைக் காவலர் அன்பரசன், காவலர் செல்வேந்திரன் ஆகியோர் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தனர். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞர் புரட்சிதாசன் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 29.9.2022-ம் தேதி நீதிபதி முருகேசன் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உதயகுமார் என்கிற கத்தி உதயகுமார்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிபாசு ஏற்கெனவே இறந்துவிட்டார். இதையடுத்து வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்த வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் மற்றும் நீதிமன்ற அலுவல் பணி புரியும் போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் கௌதமன் ஆகியோர் பாராட்டினர்.