ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நவாமுண்டி (Noamundi) தொகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவிகள் தங்கள் ஆசிரியை மீது வைத்துள்ள புகார்கள் அம்மாநிலத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
தங்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பறையில் தங்களுக்கு அநாகரீகமான ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், தகாத முறையில் தங்களை தொட்டதாகவும் அம்மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புதன் கிழமையன்று (செப். 28) எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
முறையாக புகார் அளித்தும் ஆசிரியை மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் கூட்டம் நடத்தி, ஆசிரியரை தண்டிக்க முடிவு செய்தனர். கிராமத்தில் வசிக்கும் பெண்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையைப் பிடித்து, அவரது முகத்தில் மை தடவி, காலணிகளால் மாலை அணிவித்தனர்.
செருப்பு மாலை அணிந்த நிலையில் ஆசிரியையை படாஜம்டா பகுதியில் ஊர்வலமாக அருகில் உள்ள ரயில் நிலையம் நோக்கி அழைத்துச் சென்றபோது, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையை சிறைக்கு அனுப்பக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.
பல மணி நேரமாக நீடித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை வட்டார காவல் ஆய்வாளர் வீரேந்திர ஏக்கா சமாதானப்படுத்தி, கிராம மக்களை கலைந்து போகச் செய்தார். படாஜம்டா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பாசுதேவ் டோப்போ, ஆசிரியையை சிறைக்கு அனுப்புமாறு கிராம மக்கள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM