புதிய டெண்டர் விடும்போது ஆட்சேபனை இல்லா சான்றிதழ் அவசியம்!
டாஸ்மாக் கடைக்கு அருகில் வாடகை இடத்தில் பார் நடத்த உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் இப்படை 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், ஏற்கனவே பார் உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்க்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை; ஆனால் பார் நடத்தப்படும் இடத்துக்கான நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியான நிலையில் திடீரென பார் நடத்தும் இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க நிர்ப்பந்திக்க முடியாது. எனவே டாஸ்மாக் பார் தொடர்பான டெண்டரை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் டாஸ்மாக் பார் உரிமை வழங்கப்படும் பொழுது நிலத்தின் உரிமையாளரிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் பார் டெண்டர் ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.