திருவிடைமருதூர்; திருவிடைமருதூர் அருகே வாண்டையார்இருப்பு கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் தாங்கு பாலத்தின் 6 கண்மாய்கள் இடிந்து விழுந்த இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
திருவிடைமருதூர் தாலுகாவில் வாண்டையார் இருப்பு, அம்மையப்பன் ஆகிய 2 இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு நாகை, வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வாண்டையார் இருப்பில் இருந்து தினமும் 125 லட்சம் லிட்டரும், அம்மையப்பனில் இருந்து 80 லட்சம் லிட்டரும் குடிநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் நீரேற்று நிலையங்களில் சேகரித்து இரும்பு குழாய்கள் மூலம் 800 கிராமங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகநீர் வரத்து மற்றும் மழை வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 2 லட்சம் நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால் வாண்டையார்இருப்பு குடிநீர் குழாயின் தாங்கு பாலத்தின் 6 கண்மாய்கள் 10 நாள் முன்பு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களும் சேதமடைந்து சப்ளை நிறுத்தப்பட்டது. இதையடுத்து அம்மையப்பன் நீரேற்று நிலையத்தில் இருந்து மாற்று ஏற்பாடாக முழுவீச்சில் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
இந்நிலையில் வாண்டையார் இருப்பு பாலத்தை சீரமைக்கும் பணிகள் ரூ.1 கோடி மதிப்பில் செய்யப்படுகிறது. இப்பணிகளை நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகையில், 6 கண்மாய்கள் விழுந்துள்ள இடத்தை பைல் பவுண்டேஷன் தொழில்நுட்பத்தில் செய்யப்பட உள்ளது. இதற்கென திருச்சியில் இருந்து 60 மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய்கள், தண்டவாளங்கள் வரவழைக்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கென தற்காலிகமாக 150 மீட்டர் நீளம் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ள ஆற்றுக்குள் வாகனங்கள் சென்றுவரும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. இதில் சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாலத்தின் 2 பக்கமும் தொங்கும் மிதவை ஏணி அமைக்கப்பட்டு 700 சென்டிமீட்டர் விட்டம் சுற்றளவு கொண்டு குழாய் பொருத்தப்படுகிறது. இப்பணிகள் அனைத்து ரூ.1 கோடி உத்தேச மதிப்பில் செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் குடிநீர் சப்ளை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். விழுந்துவிட்ட தாங்கு பாலத்தை கோடை காலத்தில் புதிதாக கட்டுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.