புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு (ஐஎப்எஸ்) பயிற்சி அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் திரவுபதி முர்மு பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் பல அம்சங்களின் அடிப்படையில் உலக அரங்கில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல முன்னேறிய நாடுகள் கூட அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை. ஆனால், இந்தியா அதில் இருந்து மீண்டு எழுந்து உள்ளது.
நமது நாடு உலகின் முன்னணி பொருளாதார நாடாக உயர்ந்து உள்ளது. உலக நாடுகளும் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளில் இந்தியா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏராளமான துறைகளில் இந்தியாவின் தலைமைக்கு யாரும் சவால் விட முடியாத அளவில் நாடு உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னணி நாடாக பங்கு வகித்து வருகிறது’ என்று கூறினார்.