ஆளுங்கட்சியான தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது. அதன்படி, பேரூராட்சி, நகரம், ஒன்றியம், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் பல பஞ்சாயத்துகளுக்கு இடையே நடந்து முடிந்தது. இதையடுத்து, அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள் தேர்வுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்.,22-ம் தேதி தொடங்கியதால், அண்ணா அறிவாலயம் களைகட்டியது. அன்றைய தினமே, சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராகப் பலரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது அந்தக் கட்சி வட்டாரத்தில் பெரும் பிரச்னையாகப் பேசப்பட்டது.
குறிப்பாக, “மாவட்டச் செயலாளர்கள் தேர்தலெல்லாம் வெறும் கண்துடைப்புதான், ஏற்கெனவே எல்லா மா.செக்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டார்கள்” என்ற தகவலும் வந்துக் கொண்டிருந்தது. மேலும், கட்சித் தலைமையில் இருக்கும் சிலரால், மா.செக்கள் மாற்றம் குறித்த செய்திகளும் கசிய விடப்பட்டன. அதன்படி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லதுரை மாற்றப்படவிருக்கிறார் என்ற செய்தி கசிந்தது முதல் பிரச்னை வெடிக்கத் தொடங்கியது. இதனால்தான் அந்த ஒரு மாவட்டச் செயலாளர் அறிவிப்பு மட்டும் தலைமை நிறுத்தி வைத்திருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.
“தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லதுரைமீது ஏகப்பட்ட புகார்கள் கட்சித் தலைமைக்கு வந்தன. இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு செல்லதுரையிடம் விசாரிக்க முற்பட்டபோது, இருவருக்கும் வாய் தகராறானது. இதனால், செல்லதுரையை கட்டாயம் மாற்ற வேண்டும் என அவர் முடிவெடுத்து தலைமையிடம் கூறிவிட்டார்.
அதேபோல, தென்காசியில் தன் ஆதரவாளர் ஒருவர் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும் என்று என்னும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.பி தனுஷ் குமாரை ஆதரித்தார். அதன்படி, தனுஷ் குமாரும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தத் தகவலை அறிந்த செல்லத்துரை, தென்காசியிலிருந்து தன்னுடைய சமூக ஆதரவாளர்களை அறிவாலயத்துக்கு வரவழைத்து கடந்த செப்.,25-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட வைத்தார். இதனால், உட்கட்சி விவகாரம் வெட்ட வெளிச்சமானது. இது குறித்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த பயனுமில்லை.
இந்த நிலையில்தான், தென்காசி முதன்மை நீதிமன்றத்தில் தி.மு.க உட்கட்சித் தேர்தல் தொடர்பாக விஜய அமுதா என்பவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அதில், “தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக, தென்காசியில் வைத்து நடத்த வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார் அவர். இது ஒட்டுமொத்த தி.மு.க-வுக்கே அவமானத்தை தேடி தந்ததால், அவரைக் கட்சித் தலைமை நேரடியாகவே அழைத்துப் பேசியது.
அப்போது, `விருதுநகரைச் சேர்ந்த ஒருவரை தென்காசிக்கு மாவட்டச் செயலாளராக்குவது சரியா? என்னுடைய தனிப்பட்ட விவகாரங்களை அமைச்சர் தலையிட்டதால்தான் அவரை எதிர்த்துப் பேசினேன். மற்றபடி, கட்சிக்காக உயிரையும் கொடுப்பேன். இதற்காக என்னை பதவியிலிருந்து தூக்குவது சரியா? தனுஷ் ஏற்கெனவே எம்.பி-யாக இருக்கிறார். அவரை வெற்றிப்பெற வைத்ததில் எனக்கும் பெரிய பங்கு இருக்கிறது.
பதவிக்காக நான் உங்களிடம்தான் கேட்டு நிற்கிறேன். எனக்கு எதிராகச் செயல்படுபவர்கள்தான் இதுபோன்ற வழக்கு போட்டிருக்கிறார்கள்’ என்று கண்ணீர் தழும்ப பிரச்னை குறித்து கொட்டிருக்கிறார் செல்லத்துரை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்” என்றனர் விரிவாக.