தேசிய விருதுகளை பெற்ற சூர்யா, அபர்ணா, ஜிவி பிரகாஷ், வசந்த் சாய், சுதா : ஜனாதிபதி வழங்கினார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : 68வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் வழங்கப்பட்டன. சூர்யா, அபர்ணா பாலரமுரளி, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா, வசந்த் சாய், அஜய் தேவ்கன், நஞ்சம்மா உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் விருதுகளை பெற்றனர். ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. 68வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கினார்.

சூர்யாவிற்கு விருது

தமிழில் சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான சூரரைப்போற்று படம் 5 விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷூம், சிறந்த படத்திற்காக இதன் தயாரிப்பாளரான 2டியின் ஜோதிகாவும், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதாவும் ஜனாதிபதி கையால் விருதுகளை பெற்றனர்.

இதேப்போல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக இயக்குனர் வசந்த் சாய் (மொழி வாரிய படம்), நடிகை லட்சுமி பிரியா(துணை நடிகை), ஸ்ரீகர் பிரசாத் (எடிட்டர்) ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

latest tamil news

மண்டேலா படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் வசனத்திற்காக மடோன் அஸ்வின் தேசிய விருதுகளை பெற்றார். இதன் தயாரிப்பாளர் ஷசிகாந்த்தும் விருது பெற்றார்.

சிறந்த பின்னணி பாடகிக்காக அட்டப்பாடி நஞ்சம்மா(அய்யப்பனும் கோஷியும் – மலையாளம்), சிறந்த இசையமைப்பாளருக்காக தமன் (அலவைகுந்தபுரம் – தெலுங்கு) ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றனர். நஞ்சம்மா விருது பெற்றபோதுஒட்டுமொத்த கலைஞர்களும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

நடிகர் சூர்யாவுடன் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

latest tamil news

ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் விருது

பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு ஒட்டுமொத்த கலைஞர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.