புதுடெல்லி: டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் உச்சியில், சமீபத்தில் கம்பீரமான அசோக சின்ன சிங்கங்கள் நிறுவப்பட்டன. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிங்கங்கள் வழக்கமாக அசோக சின்னத்தில் காணப்படும் அமைதியான சிங்கங்களை போல் இல்லாமல், மிகவும் ஆக்ரோஷமாகவும், பற்கள் கோரமாக தெரியும் வகையில் வாயை திறந்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அல்தானிஸ் ரெயின், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகிய 2 வழக்கறிஞர்கள், ‘இந்திய அரசு சின்னங்கள் துஷ்பிரயோக தடுப்பு சட்டம் – 2005ல் அங்கீகரிக்கப்பட்ட சிங்கங்களை போல் இல்லை.
மேலும், வாய்மையே வெல்லும் என்று வாசகமும் இதில் இடம் பெறவில்லை. எனவே, இதை அகற்ற உத்தரவிட வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஷா அமர்வு, ‘இந்திய அரசு சின்னங்கள் சட்டத்தை மீறும் வகையில், இந்த சின்னத்தில் எதுவுமில்லை. அவரவர் மனதுக்கு ஏற்ப எண்ணங்கள் மாறுபடும்,’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.