நாமக்கல் அருகே கோவில் பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாமக்கல் அடுத்து முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலின் பூசாரி அண்ணாதுரை. இக்கோவிலின் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் மற்றும் ஆணையர் ரமேஷ் இருவரும், அண்ணாதுரை மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து கோவிலில் பூஜை செய்ய மாதம் 21 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். மாமூல் கொடுக்கமுடியாத அண்ணாதுரை இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பணத்தை அண்ணாதுரை எடுத்து சென்றுள்ளார். உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், ஏளூரில் உள்ள லட்சுமிகாந்தனிடம் அண்ணாதுரை பணத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலர் லட்சுமி காந்தனை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். அதேபோல், லஞ்ச பணத்தை கொடுக்க சொன்ன ரமேஷையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து உதவி ஆணையர் ரமேஷையும், செயல் அலுவலர் லட்சுமிகாந்தனையும் பணியிடை நீக்கம்செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை அடுத்து தற்போது இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM