திருப்புவனம்: திருப்புவனம் அருகே பஸ் வசதி கேட்டு புல்வாய்க்கரை ரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே தவத்தாரேந்தலில் சுமா 300 குடும்பங்கள் உள்ளன. இங்கு வழக்கமாக காலை 5 மணிக்கும், 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும், இரவு 8 மணிக்கும் வந்த பஸ்கள் கடந்த மூன்று வருடங்களாக நின்று விட்டன. தவத்தாரேந்தலில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க திருப்புவனம் தான் வர வேண்டும். பஸ் இல்லை என்பதால் கருவக்குடிக்கு 4 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டும்.
எனவே காலை 8 மணிக்கு பஸ் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் பஸ் இயக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை கருவக்குடிக்கும், மேலராங்கியம் விலக்கு ரோட்டுக்கும் அருகே மெயின் ரோட்டில் தவத்தாரேந்தல் மாணவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 1 மணிநேரம் நடந்தது. பள்ளிக்கு மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.