பெங்களூரு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) 23-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதன்முதலாக பாஜக ஆளும் மாநிலத்தில் ராகுல் இன்று தனது பயணத்தைத் தொடங்குகிறார். கர்நாடகா வந்த ராகுல் காந்தியை அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில எல்லைக்குச் சென்று வரவேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை தமிழகம், கேரளாவில் நடந்து வந்த இந்த யாத்திரை அதன் 23-வது நாளில் கர்நாடகாவை அடைந்துள்ளது. முதல் முறையாக பாஜக ஆளும் ஒரு மாநிலத்தில் நடக்க இருக்கும் யாத்திரைக்காக கர்நாடகா வந்துள்ள ராகுல் காந்தியை மாநில எல்லையில் சென்று அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.
கர்நாடகா காங்கிரஸார் தங்கள் மாநிலத்தில் நடக்க இருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காகவும், ராகுல் காந்தியை வரவேற்பதற்காகவும் பல நாட்கள் வேலை செய்துள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸில் யாத்திரை முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர் சந்தீப் சாஸ்திரி, “இந்த யாத்திரை காங்கிரஸ் இயக்கத்தின் இருப்பை மாநிலத்திலும் தேசிய அளவிலும் உறுதி செய்யும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஒரு வலிமையான எதிர்கட்சி என்ற பெயரை தக்கவைத்துக் கொள்ள மிக முக்கியமான பங்கு வகிக்கும். மேலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் இருவருக்கும் தங்களின் வலிமையை நிரூபிக்க உதவும் எனத் தெரிகிறது. யாத்திரை நிகழ்ச்சிகளை நிர்வகிக்க மாநில காங்கிரஸ் 18 குழுக்களை அமைத்துள்ளது. கட்சியின மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், 5000 பேர் யாத்திரையில் பங்கேற்க செய்யவேண்டும் என்று கட்சி எம்எல்ஏ களுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை வரவேற்கும் வகையில், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து கேட்ட போது, “ராகுல் கர்நாடகாவிற்கு வரட்டும் போகட்டும். கடந்த 2019 தேர்தலில் அவர் வந்து சென்ற இடங்களில் எல்லாம் தாமரை மலர்ந்தது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.