நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் ஹோட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் அகன்ஷா மோகன் (30). மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன ‘சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன், விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ஹோட்டலுக்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், ‘எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என அவர் கைப்பட எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், நடிகையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.