புதுடில்லி,:பி.டி.ஐ., எனப்படும், ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’வின் இயக்குனர்கள் குழுவில் ஒரு இயக்குனராக, ‘தினமலர்’ நாளிதழின் பதிப்பாளர் எல்.ஆதிமூலமும், துணைத் தலைவராக கே.என்.சாந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான செய்தி நிறுவனமாக பி.டி.ஐ., எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பல்வேறு பத்திரிகைகளின் உரிமையாளர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் கிடைக்கும் லாபத்தை, அதன் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளாமல், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கே மீண்டும் செலவிட்டு வருகின்றனர்.
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் தலைவராக அவீக் சர்க்கார் 2021ல் நியமிக்கப்பட்டார். இவர் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். இவரை தவிர பல்வேறு பத்திரிகைகளின் பதிப்பாளர்கள், பல்துறை பிரபலங்கள் அடங்கிய இயக்குனர்கள் குழுவில், 16 பேர் இயக்குனர்களாக உள்ளனர். இந்நிலையில், பி.டி.ஐ., இயக்குனர்கள் குழு நேற்று கூடியது. இதன் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் கே.என்.சாந்தகுமார், இரண்டாவது முறையாக மீண்டும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஓராண்டு இந்த பதவியில் நீடிப்பார்.’தினமலர்’ நாளிதழின் கோவை பதிப்பின் பதிப்பாளரும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவருமான எல்.ஆதிமூலம், இயக்குனர்கள் குழு உறுப்பினராக தேர்வானார்.’தினமலர்’ நாளிதழின் பதிப்பாளராக உள்ள ஆதிமூலம், கடந்த 37 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பிரிவில் அங்கம் வகித்து வருகிறார்.
நாளிதழின் அச்சுப் பிரிவில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியதுடன், நாளிதழ் வினியோகம், இணையதளம் ஆகியவற்றையும் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.ஐ.என்.எஸ்., எனப்படும் இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஆதிமூலம், ஏ.பி.சி., எனப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் நிர்வாக கவுன்சிலில், 2019 – 20, 2020 – 21, 2021 – 22ம் ஆண்டு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement