புதுக்கோட்டையில் பத்திரப் பதிவு அலுவலக அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார்(55). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பணியாற்றினார். அப்போது இவரது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் தேனிக்கு இடமாறுதலில் சென்ற அஞ்சனகுமார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு மாறுதலாகி மாவட்ட பதிவாளர் தணிக்கை பிரிவில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை  புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள அஞ்சனகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள சொத்து ஆவணங்கள், வங்கி பாஸ்புத்தகங்களையும் ஆய்வு செய்தனர்.

காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை பிற்பகல் 3.30 மணி வரை நடந்தது. இந்த சோதனை முடிவில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட சார்பதிவாளரின் மதுரை வீட்டிலும் ரெய்டு: மதுரை, பாண்டிகோவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜவகர். இவர் குமரி மாவட்டத்தில் வழிகாட்டு மதிப்பீட்டு பிரிவு சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது பாண்டிகோவில் பகுதி வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.