சின்னாளபட்டி: பாளையன்கோட்டையில் உள்ள பெண்கள் பொது கழிவறை பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதிமக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளையன்கோட்டை ஊராட்சியில் பாளையன்கோட்டை, கூலாம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி, லட்சுமிபுரம், பின்னிராயபுரம், கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இவற்றில் பாளையன்கோட்டையில் உள்ள மயான சாலையில் பெண்கள் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.