பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முக்கிய கேரக்டர்களை கதர் துணியில் இயற்கையான சாயத்தைக் கொண்டு வரைந்து பெருமை சேர்த்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா.
மதுரை அனுப்பானடியில் வசிக்கும் கிருத்திகா, ஃபேஷன் டெக்னாலஜி படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே காபி ஓவியம் உள்ளிட்ட வித்தியாசமான ஓவியங்களை வரைந்து ரிகார்ட்ஸ்களில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி இன்று அதிகாலை உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தமிழகத் திரையுலகில் பலரும் படமாக்க நினைத்த சரித்திர சம்பவமாகப் பார்க்கப்படும் புனைவு கலந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் பலவிதமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாறுபட்ட ஓவியத்தை கிருத்திகா உருவாக்கியுள்ளார்.
மதுரை கோபுரம் சினிமாஸில் ஓவியத்தைக் காட்சிப்படுத்தியிருந்த கிருத்திகாவிடம் இது குறித்து கேட்டேன், “நான் ஃபேஷன் டிசைன் முடித்தேன். வித்தியாசமான முறையில் ஓவியம் வரைவதில் எனக்கு இன்ட்ரஸ்ட் அதிகம். ஏற்கனவே காஃபி பவுடர் மூலம் பெண்களின் ஒவ்வொரு பருவங்களையும் ஓவியமாக வரைந்ததை virtue world records அங்கீகரித்தது.
அதைத் தொடர்ந்து வித்தியாசமான முறையில் பலவித ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தி வருகிறேன்.
இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன் படம் குறித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேச்சு ஓடிக்கொண்டிருப்பது எனக்குள்ளும் ஒரு தாக்கத்தை உருவாக்கிடுச்சு. நான் அந்த நாவலை படிச்சதில்ல. அது பரபரப்பா பேசப்பட்டதும் இணையம் மூலம் கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன்.
படம் வரும்போது எனக்குத் தெரிந்த கலையால எதாவது செய்யணும்னு முடிவு செஞ்சு அந்த முக்கிய கேரக்டர்களை புது முயற்சியில வரையணும்னு ஐடியா பண்ணேன்.
சோழப் பேரரசு காலத்துல விவசாயம் செழிப்பா இருந்ததா படிச்சிருக்கேன். அதனால இயற்கை முறையிலான சாயத்துல ஓவியம் வரையலாம்னு கலர் உள்ள காய்கறிகளை தேர்வு செஞ்சதில் பீட் ரூட் சரியா அமைஞ்சது. அதோடு சர்க்கரை பாகுவையும் கலந்து பயன்படுத்தினேன். அட்டை, கேன்வாஸ்ல வரையாமல் கைத்தறி கதர் துணியை காபித் தண்ணியில ஊற வச்சு அதுல வரைஞ்சேன். இயற்கை சாறு எடுத்து வரையுறது கஷ்டம்தான் என்றாலும், முக்கிய கேரக்டர்கள் அனைவரையும் 3 நாளில் வரைஞ்சு முடிச்சேன். மன்னர்கள் காலத்தில் ஓலைகள், கைத்தறித் துணிகள் மூலம்தான் செய்திகள் அனுப்புவார்கள். இதுபோன்று இந்த ஓவியங்களை வரைந்தேன். இப்ப தியேட்டருக்கு படம் பார்க்க வந்த பலரும் பாராட்டுனாங்க. பொன்னியின் செல்வன் கொண்டாட்டத்தில் என்னுடைய பங்கு இது” என்றார்.