பொன்னியின் செல்வன் – தியேட்டர்களில் குவியும் குடும்பத்தினர்
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கடந்த 70 வருடங்களாக பல தலைமுறையினர் படித்து வந்தனர். இன்றைய இளம் தலைமுறையினர் வேண்டுமானால் கொஞ்சம் குறைவாகப் படித்திருக்கலாம். ஆனால், தற்போது 30 வயக்கு மேல் உள்ளவர்கள் பலரும் நாவலைப் படித்திருப்பார்கள். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் இவ்வளவு வருடங்களாக இந்த நாவல் திரைப்படமாக உருமாறவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
அந்த வருத்தத்தை இன்று மணிரத்னம் மற்றும் குழுவினர் போக்கிவிட்டனர். எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனதை மணிரத்னம் செய்து காட்டி இன்று படமாகவும் வெளியிட்டுவிட்டார். இன்று வெளியான முதல் பாகத்திற்கான சிறப்பு காட்சிகள் அதிகாலை 4.30 மணிக்கே ஆரம்பமானது. பொதுவாக அதிகாலை காட்சிகள் என்றாலே ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்குத்தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதிலும் இளைஞர்கள் கூட்டம் தான் இருக்கும்.
ஆனால், இன்று 'பொன்னியின் செல்வன்' அதிகாலை சிறப்புக் காட்சியைப் பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் பலரையும் பார்க்க முடிந்தது ஆச்சரியமான ஒன்று. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. நாவலைப் படிக்காதவர்களும் கூட படத்தைப் பார்த்து பிரமித்துப் போய் நாவலைத் தேடிப் பார்த்துப் படித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
படம் பார்த்து முடித்த பின் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிடவும், யு டியூப் தளங்களில் வந்து படத்தைப் பற்றிக் கேட்டதற்கு தங்கள் கருத்துக்களைச் சொல்லவும் அதிக ஆர்வங்களைக் காட்டினர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி மக்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டர்களுக்கு வருகை புரிவது தியேட்டர்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த வாரம் வரை பெரும்பாலான காட்சிகளுக்கு ஏற்கெனவே முன்பதிவு முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை சீக்கிரம் வெளியிட வேண்டும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது.