கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சி செய்து வந்தனர், எம்ஜிஆர் தொடங்கி கமல், ரஜினி என திரையுலகில் மூத்தவர்கள் அனைவரும் முயற்சி செய்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இதனை நான் எடுத்து முடிக்கிறேன் என்ற சபதத்தில் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார், முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் நாள் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்தது. அனைவருக்கும் தெரிந்த கதையை என்றாலும் அதனை எப்படி திரையில் காட்டியுள்ளனர் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கும் டிக்கெட் இல்லை என்று நிலையில்தான் இன்று பொன்னியின் செல்வன் படம் வெளியானது.
வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா மற்றும் பல சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் நடித்து உள்ளனர். மணிரத்தினம் இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 நாட்கள் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் ஆரம்பத்திலிருந்து பிரம்மாண்டமாய் ஒவ்வொரு காட்சிகளும் எடுக்கப்பட்டு இருந்தது. ஆதித்யா கரிகாலன் போரில் வெல்வதில் இருந்து படம் ஆரம்பமாகி அடுத்தடுத்து என சுவாரசியமாக செல்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் வந்திய தேவனாக கார்த்தி படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார். எதார்த்தமான நடிப்பில் வந்திய தேவனாக வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.
இவருக்கு அடுத்தபடியாக தனது நடிப்பின் மூலம் அனைவரையும் அசர வைத்துள்ளார் ஐஸ்வர்யாராய். கண்களாலேயே அனைவரையும் வசியம் வைத்து ரசிக்கவும் வைக்கிறார். குந்தவையாக அழகின் சிகரமாக த்ரிஷா திரையில் ஜொலிக்கிறார். கார்த்தியை அடுத்து இவருக்கு தான் திரையரங்கில் அதிக கைத்தட்டுகளில் விழுகிறது. முடிந்தவரை சிஜி காட்சிகள் இல்லாமல் ஒரிஜினல் லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். படத்திற்கு அவர்கள் எடுத்துக் கொண்டு மெனக்கெடு ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. செட் ஒர்க், லொகேஷன், ஆடை வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் புத்தக விரும்பிகளுக்கு இப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், புத்தகம் படிக்காமல் நேரடியாக படத்தை பார்ப்பவர்களுக்கு ஆங்காங்கே சில குழப்பங்கள் இருந்தாலும் இறுதியில் ஒரு படமாக அவர்களுக்கு பிடித்து விடும். இடைவேளைக்கு பிறகு வரும் ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக கட்டுமஸ்தான உடலுடன், ஒரு ராஜாவாக நம் கண் முன்னே நிற்கிறார். யானையில் அவர் வரும்போது ராஜ ராஜ சோழனை பார்ப்பது போலவே உள்ளது. படத்தில் பல இடங்களில் சிரிக்க வைப்பது ஜெயராம் தான். அவருக்கும் கார்த்திக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது.
படம் முடியும்போது இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் தோன்றுகிறது. ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் பிரச்சனையாக பார்க்கப்படுவது எந்த வித ஹைப்பம் இல்லாமல் படம் நகர்கிறது. புத்தகத்தை தாண்டி இந்த படத்தை திரையில் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்தது ஒவ்வொரு காட்சிகளும் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க தான். புத்தகத்தை அப்படியே படமாக எடுத்துள்ளார்களே தவிர எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் பில்டப் காட்சிகள் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்தந்த கதாபாத்திரங்களின் மீதான ஈர்ப்பு படம் நகர நகர குறைகிறது. மற்றபடி பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு படமாக நிச்சயம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் வசூலில் இப்படம் ஒரு புதிய மைல்கல் எட்டும்.