நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ்.பி.பி. சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியானது. இதனை மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பாலாஜி மோகனின் தயாரித்துள்ளார்.
நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், இன்று (செப். 30) முதல் ஆஹாவில் ‘மேட் கம்பெனி’ காமெடி வெப்சீரிஸ் ஒளிப்பரப்பாகிறது. பணியிடத்தில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்த வலைத்தளத் தொடரின் தயாரிப்பாளரான ராஜா ராமமூர்த்தி, இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார், நடிகர்கள் பிரசன்னா, ஹரி, சர்வா, நடிகை சிந்தூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் பிரசன்னா பேசுகையில்,”நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வரவெச்சி நடிக்க வெச்சா எப்படியிருக்கும் என்கிற ‘மேட்’ ஐடியாதான் இந்த ‘மேட் கம்பெனி’-யின் அடித்தளம். ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அது எல்லாத்தையும் ஜாலியா… நல்ல பொழுதுபோக்கா பண்ணியிருக்கோம். ‘பொன்னியின் செல்வன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைப் பார்த்தபிறகு, டைம் கிடைக்கும் போது, ‘ஆஹா’-ல இருக்கும், இந்த ‘மேட் கம்பெனி’-யின் எட்டு எபிசோடையும் பாருங்க” என்றார்.
படத்தின் இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார் பேசுகையில்,“இந்த படத்தின் கான்செப்ட் என்னவெனில், நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரையாவது தவறவிட்டிருப்போம். இது போன்ற ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் நன்றாகயிருக்குமே என பல தருணங்களில் நினைப்போம். அதாவது நம்முடைய வீட்டில் உள்ள பாட்டி புலம்புவதைக் கேட்க ஒரு ஆள் வேண்டும் என சில விசயங்களை எளிமையாக நினைத்திருப்போம். அதுபோன்ற விசயங்களை நடத்திக்காட்ட ஒரு நிறுவனம் இருந்தால்… அது தான் மேட் கம்பெனி.
திடீரென்று ஒரு நபருக்கு முன் நின்று,‘நான் தான் உனது அண்ணன்’ என்றால் அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதை அவர் நம்பவும் மாட்டார். அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை கொண்டதுதான் இந்த வலைத்தளத் தொடர்.நம்மில் பலரும் பல தருணங்களில்,‘ஒரு சின்ன ஸாரியை சொல்லியிருந்தால் போதும். இந்த நிலை ஏற்பட்டிருக்காது’, ‘ஒரு போன் செய்திருந்தால் போதும் நிலைமையே மாறியிருக்குமே’ என எண்ணுவோம். இதனை மையப்படுத்தித்தான் இந்த ‘மேட் கம்பெனி’ என்ற வலைத்தள தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக ‘ஆஹா’ ஆஃப்பில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து, ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஆஹா டிஜிட்டல் தளத்தில் ‘கூகுள் குட்டப்பா’, ‘அம்முச்சி 2’, ‘சர்க்கார் வித் ஜீவா’, ‘குத்துக்கு பத்து’ என ஏராளமான ஒரிஜினல் நகைச்சுவை படைப்புகள் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில், ‘மேட் கம்பெனி’ தொடரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.