பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்படுவதை அடுத்து, பல்வேறு மக்கள் இதற்காகவே பொன்னியின் செல்வன் புதினத்தை ஆர்வத்தோடு வாங்கி படித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் புதினத்தில் எந்தளவிற்கு வரலாற்று உண்மைகள் இருக்கின்றன? எந்தெந்த கதாப்பாத்திரங்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் என்று பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்துக்கொள்கிறார்.
தமிழகத்திலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசு சோழப் பேரரசு தான். சோழப் பேரரசை சங்க காலப் பேரரசு, பிற்காலப் பேரரசு என்று இரு வகையாகப் பிரிக்கலாம். 5 ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து ஏறத்தாழ 430 வருடங்கள் பிற்காலச் சோழர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்தார்கள். விஜயாலய சோழன் தான் இந்தப் பேரரசைத் தோற்றுவித்தார். அது மூன்றாம் இராஜேந்திரன் வரை தொடர்ந்தது. பொன்னியின் செல்வன் போன்ற புதினங்கள் தான் இந்த வரலாற்றினை மக்களிடையே வெற்றிகரமாய் கொண்டு சேர்த்தன. வரலாற்றாசிரியர்கள் எழுதும் நூல்களை எடுத்துக்கொண்டால், அது புதினங்கள் படிப்பது போல சுவாரஸ்யமாக இருக்காது. தகவல்கள் தான் இருக்கும். அப்படி பார்க்கும் போது சோழ வரலாறு மக்களிடையே பெருமளவில் பரவுவதற்குக் காரணம் பொன்னியின் செல்வன் தான்.
ஆனால் இந்தப் புதினங்கள் எல்லாம் அப்படியே வரலாற்றினை பிரதிபலிக்கின்றனவா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. எந்தவொரு ஆசிரியரும் அந்தப் புதினத்தின் சுவாரசியத்தைக் கூட்ட தம்முடைய கற்பனையைக் கதையை சேர்த்துக்கொள்வார்கள். ஒரு வரலாற்று புதினம் என்று எடுத்துக் கொண்டால் அதில் 40 விழுக்காடு தான் உண்மையான வரலாறு இருக்கும். மீதமுள்ள 60 விழுக்காடு அந்த ஆசிரியரின் கற்பனைக் கதையாகத் தான் இருக்கும். அதனால் புதின ஆசிரியர் தமது கற்பனை கதாப்பாத்திரமானது வரலாற்றினை மாற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொன்னியின் செல்வனை எடுத்துக்கொண்டால் அதில் 50 விழுக்காடு கற்பனைக் கதையும், 50 விழுக்காடு உண்மையான வரலாறும் இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாப்பாத்திரம் முழுக்க கல்கியின் ஒரு கற்பனை கதாப்பாத்திரமே. ஆனால் அந்தக் கதாப்பாத்திரத்தில் அந்த அளவிற்கு உண்மை தன்மை இருப்பதால், அதை கற்பனை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அதே சமயம் கல்கி சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையர் என்று இரு பழுவேட்டரையர்களை தம் கதைகளில் கூறியிருப்பார். ஆனால் உண்மையில் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஒரேயொரு பழுவேட்டரையர் தான் இருந்தார். அவரைப் பற்றியும் பெருமளவில் நமக்கு குறிப்புகள் கிடைக்கவில்லை.
வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், குந்தவை இவர்கள் எல்லாம் தான் உண்மையான கதாபாத்திரங்கள். சோழப் பேரரசிலேயே முதன்முதலில் மெய்கீர்த்தி எழுதியது அருள்மொழிவர்மன் தான். அது வரை எந்த அரசரும் அதற்கு முன்னர் மெய்கீர்த்தி எழுதியது கிடையாது. பிற்காலத்தில் வருபவர்களுக்கு பொய்கீர்த்தியாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இராஜராஜன் தான் சாத்தித்தவை அனைத்தையும் மெய்கீர்த்தியில் எழுத ஆரம்பித்தான். அதில் இராஜராஜன் தான் வெற்றி பெற்ற இடங்களான குடமலை நாடு, கொல்லம், கலிங்க நாடு, ஈழ நாடு ஆகிய அனைத்தும் பதிவு செய்திருக்கிறான். இதில் பெரும்பாலான போர்களில் இராஜேந்திர சோழன் கலந்துகொண்டு தான் வெற்றியை ஈட்டித் தந்தான். ஆனால் அப்போது இராஜராஜன் ஆட்சி செய்தமையால் வெற்றி அனைத்தும் இராஜராஜ சோழன் வசம் வந்தடைந்தது.
பண்டைய சோழ நாட்டைப் பொறுத்தவரை உறையூரும், பூம்புகாரும் தான் தலைநகரங்களாக இருந்தன. பின்னர் பிற்கால சோழர்கள் வரும் போது விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஒரு புதிய சோழ நகரை உருவாக்குகிறான். இராஜராஜ சோழன் வரைக்கும் இது தொடர்ந்தது. அதன்பின்னர், இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தம் தலைநகராக்குகிறான். ஆனால் இவை இரண்டும் தலைநகராக இருந்ததே தவிர, அவர்கள் குடும்பத்தார் வசிக்கும் இடமாக ஏதும் இடம்பெறவில்லை. அவர்கள் குடும்பத்தார்கள் எல்லாரும் பழையாறை எனும் ஊரில் வசித்து வந்ததாகத் தான் தகவல் உள்ளது. பொன்னியின் செல்வனிலும் குந்தவையும் வானதியும் பழையாறை அரண்மனையில் தான் இருப்பார்கள். இந்தப் பழையாறை தற்போது கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் முற்கால சோழர்கள் கட்டிய கோயில்கள் யாவும் ஆங்காங்கே தஞ்சையைச் சுற்றி நாம் காணலாம்.
கோயில்களைத் தாண்டி சோழர்கள் செய்த ஒரு மிகப்பெரிய அற்புதம் அது நீர் மேலாண்மை. புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் பல வறண்ட பகுதிகளை வளமான பகுதிகளாய் மாற்றிய பெருமை இராஜராஜனையே சேரும். மாயனூர் அருகே உய்யக்கொண்டான் கால்வாயைத் திருச்சி வரை அமைத்து நூற்றுக்கணக்கான ஏரிகளுக்கு பாசனம் செய்தான் இராஜராஜ சோழன். எல்லா மதத்தினரிடமும், சமயத்தினரிடமும் வேறுபாடில்லாமல் நடந்தான் இராஜராஜன். பொன்னியின் செல்வனில் கூட புத்த விகாரம் பற்றி மிகுதியாய் பேசப்பட்டிருக்கும்” இவ்வாறு பொன்னியின் செல்வனின் சிறப்புகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறினார்.