அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிட்டதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராதவர் ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் சோனியா காந்தி குடும்ப உறுப்பினர்களும் உறுதியாக இருக்கின்றனர். இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி சென்ற சசி தரூர், தேர்தல் நடத்தும் குழுவினரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர், கட்சியினருக்கு தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதை பார்த்த கட்சியினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த மேப்பில், காஷ்மீரின் சில பகுதிகள், லடாக் ஆகியவை இடம் பெறவில்லை. இது அனைவரது மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து சமூக வலைதளங்களில் சசி தரூருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜகவினரும் சசி தரூரை சரமாரியாக விமர்சித்தனர். இந்திய வரைப்படம் தவறாக இருப்பதை அறிந்த சசி தரூர், உடனே அதை சரி செய்து வெளியிட்டார்.
இந்நிலையில், இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிட்டதற்காக, சசி தரூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வேண்டுமென்றே யாரும் இது போன்ற செயல்களைச் செய்வதில்லை. ஒரு சிறிய குழு இந்த தவறை செய்து விட்டது. நாங்கள் அதை உடனடியாக சரி செய்து விட்டோம். செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.