மனிதக்கழிவை மனிதர்களே அகற்றலாமா? தனியொரு மனிதன் பெற்றுத்தந்த தீர்ப்பு!

மனிதக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு அகற்றும் நிலை இனி தொடர்ந்தால் எங்கு நடக்கிறதோ அந்த மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று வழக்கறிஞர் அய்யா மேற்கொண்ட பொது நல வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கையால் மலம் அள்ளும் முறை என்கிற கொடுமையிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் காக்கும் விதத்தில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கினைத் தொடர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யாவிடம் பேசுகையில்…

வழக்கறிஞர் அய்யா

“கையால் மலம் அள்ளும் முறைக்கு (manual scavenging) எதிராக சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட, இன்றைக்கும் கழிவுநீர் தொட்டியில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறக்கப்படுகிற அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கழிவுநீர் தொட்டியில் இறங்கும்போது விஷவாயு தாக்கி ஆண்டுக்கு சுமார் 15 துப்புரவுத் தொழிலாளர்கள் இறக்கின்றனர்.

இந்த அவலம் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருவது வேதனைக்குரியது. மேலை நாடுகளைப் போலவே அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கப்பெறும் சூழலில்தான் நாம் இருக்கிறோம். அரசின் பல துறைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டு விட்ட நிலையில் துப்புரவுத் தொழிலில் மட்டும் நவீன வசதிகளை பெரிய அளவில் கொண்டு வரவில்லை.

“டிஜிட்டல் இந்தியாவிலும் கையால்தான் மலம் அள்ள வேண்டுமா?” #AnnihilateCaste #EndManualScavenging

சாக்கடை அடைத்துக் கொண்டால் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியே எடுத்து விட முடியும். ஆனால் மண் மற்றும் சகதியை ஆள் இறங்கித்தான் அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது. மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அகற்றுவதில் சாதிய ஒடுக்குமுறையும் அடங்கியிருக்கிறது. பட்டியலின சமூகங்களில் ஒன்றான அருந்ததியர் சமூக மக்கள்தான் இத்துப்புரவுத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். சமூகப் படிநிலையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட அச்சமூகத்தினர் வேறு வழியின்றி இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி மரணமடைந்தால் கூட இறந்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாகக் கூறி மீண்டும் இதே துப்புரவுப் பணியைத்தான் கொடுக்கிறார்கள்.

இந்த சமூக அவலத்தைக் களையும் நோக்கோடு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வெளிநாடுகளைப்போல் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான கவச உடை வழங்கப்பட வேன்டும் என்பதை வலியுறுத்தி பொது நல வழக்கினைத் தொடர்ந்தேன். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு…

துப்புரவு பணியாளர்

“இன்றும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்வது வேதனைக்குரியது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி இது போன்ற அவலத்தை நீதிபதிகள் பார்க்கும்போது நீதிமன்றமே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்கும். துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவதை உரிய புகைப்பட ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் நிலையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் பணியிடை நீகம் செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். மேலும் இது குறித்த விரிவான தகவல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்க மனுதாரரான எனக்கும், அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளனர்” என்கிறார் அய்யா. 

மனிதக்கழிவை அகற்றும் துப்புரவுப் பணியில் ரோபோ பயன்பாடு சாத்தியமா? என்பது குறித்து கேள்வி கேட்ட நீதிபதிகள் கையால் மலம் அள்ளும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும் இது தொடரும் நிலை என்றைக்கு மாறும் எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற ரயில் பெட்டிகளில் கழிப்பறை தேக்கத் தொட்டியோடு அமைக்கப்படுகிறது. இந்தியாவுக்குள் இயங்கும் ரயில்களில் தண்டவாளத்திலேயே கழிவுகள் விழும் வகையில் நீண்ட காலமாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்து, அம்முறை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மாறியது. மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே அகற்றுவது என்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மனிதத்தன்மை அற்றதும் கூட. இதன் விளைவாக தொடர்ச்சியாக மரணங்கள் ஏற்பட்டும் கூட இந்நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. நவீன தொழில்நுட்பத்தை துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்துவது உடனடி அவசியம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.