பாட்னா :அரசு விழாவில், குறைந்த விலையில் ‘சானிட்டரி நாப்கின்’ அளிக்க கோரிய மாணவியிடம், ‘அடுத்து கருத்தடை சாதனம் கேட்பீர்கள்’ என, கிண்டலாக பதில் அளித்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
இதற்கு, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனரும், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் பம்ரா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியரின் கேள்விகளுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி பம்ரா பதில் அளித்தார். அப்போது, ஒரு மாணவி ‘மாணவியருக்கு சீருடை, ‘ஸ்காலர்ஷிப்’ ஆகியவற்றை அரசு கொடுக்கிறது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும், ‘சானிட்டரி நாப்கின்’களையும் 20 – 30 ரூபாய் விலையில் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தார்.இதற்கு பம்ரா பதில் அளிக்கையில், ‘நாளையே அரசு, ‘ஜீன்ஸ் பேன்ட்’ கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்பீர்கள்.
இப்படியே போனால், ‘காண்டம்’ கூட அரசு தரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்’ என்றார். இந்த பதில் அரங்கில் இருந்த பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.கேள்வி கேட்ட மாணவி, ‘மக்களின் ஓட்டு தானே அரசாங்கத்தை உருவாக்குகிறது’ என, அசராமல் அடுத்த கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த அதிகாரி பம்ரா, ‘இது முட்டாள்தனமான வாதம். அப்படியானால் ஓட்டு போடாதீர்கள்.
அரசு தரும் பணத்துக்கும், சலுகைக்கும் தான் ஓட்டு போடுகிறீர்களா’ என, பதில் கேள்வி எழுப்பினார்.இந்த உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பம்ரா ஏழு நாட்களுக்குள் தன் பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி, தேசிய பெண்கள் கமிஷன் உத்தரவிட்டது.அதோடு முதல்வர் நிதிஷ் குமாரும் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பம்ரா தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement