புதுச்சேரி: மின்துறை விவகாரம் குறித்து ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக ஆங்காங்கே பொதுமக்கள் இன்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறை செயலர் அருண் ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்தும் சுமார் 40 நிமிடங்கள் வரை ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தற்போது இருக்கின்ற சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசினோம். மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். சட்டபூர்வமாக அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை பற்றி விவாதித்தோம்.
அது மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் காய்ச்சல் சூழ்நிலை, மருத்துவமனையை மேம்படுத்துவது, நூலகங்களைப் பார்வையிட்டது பற்றியும் விவரித்தோம். உலகத் தமிழ் மாநாடு ஒன்று நடத்துவது பற்றியும் விவாதித்திருக்கிறோம். ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பு. நிச்சயமாக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். போராட்டம் இருக்கக் கூடாது. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம்” என்றார்.
முன்னதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மணக்குள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அரசு நல்ல முடிவுகளை எடுக்கிறது. அதை மின் ஊழியர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும். யாரும் இருட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் முடிவு. அதனால் எந்த வகையிலும் மக்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் நாம் எடுக்கும் முடிவால் மக்களுக்கு மின் கட்டணம் மிக அதிக அளவு குறையும்.
மின் பரிமாற்றத்தால் வீணாகும் மின்சாரம் மிக அதிக அளவு குறையும். இது எல்லாமும் நல்லது. பல துணைநிலை மாநிலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நல்லது நடக்கும். எந்த நடவடிக்கையும் மக்களுக்கு எதிராகவோ, ஊழியர்களுக்கு எதிராகவோ புதுச்சேரியில் இருக்காது என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கருத்து. அதை புரிய வைப்போம். ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் வைக்கும் கோரிக்கை. எந்த விதத்திலும் மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பது மிக தாழ்மையான கருத்து.
ஏனென்றால் பல கொள்கை முடிவுகள் இருக்கலாம். மாற்று கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான மின் தடையை ஏற்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால் குழந்தைகள் படிக்கிறார்கள். நோயாளிகள் வீட்டில் இருப்பார்கள். சில முக்கியமான, மங்களகரமான நிகழ்வுகள் எல்லாம் வீட்டில் நடக்க இருக்கும். அதனால் நம் சுயநலத்துக்காக மின்தடையை ஏற்படுத்தினால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எந்த கோரிக்கையும் வைக்கலாம் அதற்கு சரியாக விளக்கம் அளிக்கப்படும். மீண்டும் சொல்கிறேன் யாரும் பாதிக்கப்படாமல் அனைவருக்கும், அனைவரும் பயனடையும் வகையிலான முடிவைத்தான் புதுச்சேரி அரசு எடுக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.