சிவகாசி: சிவகாசியில் தீபாவளிக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பும் புஸ்வாண பட்டாசுகள், 300 அடி உயரம் சென்று, வானில் வண்ணஜாலம் நிகழ்த்துகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வால் 40 முதல் 50 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களான அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் ஆகிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதுதவிர பட்டாசுக்கு தேவையான அட்டைப்பெட்டி, காகிதங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஆலை உரிமையாளர்கள் 40 சதவீதம் வரை பட்டாசுகளின் விலையை உயர்த்தியுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு 40 முதல் 50 சதவீதம் வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளது. ரூ.100க்கு விற்கப்பட்ட பட்டாசு இந்த ஆண்டு ரூ.150 வரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சரவெடி பட்டாசு தயாரிக்க தடை உள்ளதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இந்தாண்டு புஸ்வாணம் போல தீப்பொறி எழும்பும் பட்டாசுகளில், பல புதுரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிறுவர்கள், பெரியவர்கள் வரை அதிகம் விரும்பும் பல வண்ணங்களில் 300 அடி உயரம் வரை மேலே சென்று வெடித்து வானில் வண்ணஜாலம் நிகழ்த்தும், பேன்சி ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு அறிமுகம் செய்துள்ள பட்டாசு ரகங்களின் வகைகள் வருமாறு:
* வாட்டர் குயின்: புஸ்வாணம் போல தீப்பொறி 10 அடி உயரம் வரை நீர்வீழ்ச்சி போல ஒளியை உமிழ்ந்து மறையும். சிறுவர்களுக்கு இந்த பட்டாசு மிகவும் பிடித்தமாக இருக்கும்.
* ஜாலி பாபி: தீப்பற்ற வைத்தவுடன் 10 அடி உயரம் வரை சரவெடி போன்று, சத்தத்துடன் தீப்பொறி வெடித்து தெரிகிறது. இந்த பட்டாசு தீபாவளிக்கு சரவெடி இல்லை என்ற குழந்தைகளின் ஆதங்கத்தை நீக்கும்.
* லக்கி: புஸ்வாணம் மஞ்சள் நிறத்தில் ஒளியை மேல்நோக்கி சிந்தியபடி செல்லும். ஆனால், இந்த லக்கி புஸ்வாணம் சிவப்பு, மஞ்சள் கலரில் நிறங்களை ெவளிப்படுத்தி, இருளை போக்கி வெளிச்சத்தை பாய்ச்சும். குழந்தைகளை அதிக மகிழ்ச்சி அடைய வைக்கும்.
* பார்ச்சூன் சக்கராஸ்: தரையில் சுற்றும் சங்கு சக்கரத்தை கையில் பிடித்து சுற்றும்படி தயாரித்துள்ளனர். கையில் பிடித்தபடி சக்கரம் சுற்றும்போது வட்ட ஒளி வடிவில் நெருப்பு பிழம்பு தெரிகிறது.
* ஓல்டு ஈஸ் கோல்டு: பட்டாசு தொழில் துவங்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில், பனையோலையில் மருந்து கலவை வைத்து வெடி தயாரித்து விற்றனர். தற்போது இதேபோல அட்டையில், பனையோலை போல செய்து வெடி தயாரித்துள்ளனர். இந்த வெடி பற்ற வைத்தவுடன் வெடித்து கலர் பேப்பர்களை பறக்க வைத்து குழந்தைகளை குஷிப்படுத்தும்.
* டாப் கன்: பட்டாசை பற்ற வைத்தால் மெஷின் துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் தோட்டாக்கள் பறப்பது போல படபடவென சத்தத்துடன், தீப்பொறி வெளியே பறந்து வருவது போன்று புது பட்டாசுகளும் அறிமுகமாகியுள்ளது.