இந்தியாவில் மிகப்பெரும் அரசுத் துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் முந்தைய ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசராவுக்கு முன்னர் வழங்கப்பட்டு விடும்.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.
ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021-ம் ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.