அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண சம்பியன்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த தொகையானது இலங்கை ரூபாயில் சுமார் 56 கோடி 87 இலட்சத்து 51 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு சம்பியன்களுக்கு வழங்கப்படும் தொகையில் 50%
வழங்கப்படவுள்ளது.
இம்முறை ரி20 உலகக்கிண்ணத்தின் மொத்த பரிசுத்தொகையாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 199 கோடி ருபாய்) செலவிடப்படவுள்ளதுடன், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 14 கோடி 21 இலட்சம்) வழங்கப்படவுள்ளது.
இதேவேளை சுபர் 12 சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு கடந்த ஆண்டு போன்று தலா 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (2 கோடி 48 இலட்சம்) வழங்கப்படவுள்ளதுடன், சுபர் 12 சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (ஒரு கோடி 42 இலட்சம்) அணிகளுக்கு பரிசாக வழங்கப்படவுள்ளன.
ரி20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் நடைபெறும் போட்டிகளில் பெறும் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதுடன், முதல் சுற்றிலிருந்து வெளியேறும் அணிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடர் ஒக்டோபர் 16 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கை – நமீபியா அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன.
பரிசுத் தொகை விபரம்
சம்பியன் – 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்
இரண்டாமிடம் – 8 இலட்சம் அமெரிக்க டொலர்
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் – 4 இலட்சம் அமெரிக்க டொலர்
சுபர் 12 சுற்றின் வெற்றிகளுக்கு – தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்
சுபர் 12 சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு – 70 ஆயிரம் அமெரிக்க டொலர்
முதல் சுற்றின் வெற்றிகளுக்கு – தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்
முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு – 40 ஆயிரம் அமெரிக்க டொலர்
M.Sakunthaladevi/w