வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறைவு வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதை தடுப்பது பற்றி விவாதிக்க அறிவுறுத்த வேண்டும். அதேப்போல வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல், கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கணக்கெடுப்பு பணி குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் கிராம சபை கூட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை அக்டோபர் 12ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை கிராம சபை முன், தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
கிராம சபை கூட்டங்களில் பெறப்படும் புகார்களை ஒரு வாரத்தில் தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், பெறப்பட்ட புகார் உள்ளிட்ட விபரங்களை கூட்டம் முடிந்த 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருக்கிறார்.
கிராம சபைக் கூட்டத்தில் ரேஷன் கடை ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறும், புகார்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணுமாறும், அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.