விசாரணைக்குச் அழைத்து சென்ற ரவுடி உயிரிழப்பு…!! தொடரும் லாக்கப் மரணம்…?

சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆகாஷ் (20). இவர் சி கேட்டகரி ரவுடி என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். இவர் மீது கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பெரம்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தி கார் கண்ணாடி கல்லால் அடித்து உடைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் ஓட்டேரி போலீசார் கடந்த 21-ம் தேதி ரவுடி ஆகாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ஆகாஷ் அதிக மதுபோதையில் மயக்க நிலையில் இருப்பதாக கூறி அவரது அக்காவை வரவழைத்த போலீசார் பின்னர் ஆகாஷை அவருடன் அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மயக்க நிலையில் சுயநினைவின்றி இருந்த ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இந்நிலையில் சுய நினைவின்றி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த ரவுடி ஆகாஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகாஷை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதால் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

விசாரணை கைதி ஆகாஷ் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்தாரா என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரவுடி உயிரிழந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டேரி காவல் நிலையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுபோதையில் உள்ளவர்களை எந்த காரணத்திற்காகவும் விசாரணைக்கு அழைத்து செல்லக் கூடாது. அவர்கள் சுயநினைவில் இருக்கும் போது விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அறிவுத்தியும் போலீசார் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.