சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நேற்று அவர்வெளியிட்ட செய்தி:
ரத்த தானம் மூலம், விலை மதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் முதல்நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான கருப்பொருள் ‘ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஓருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்’ என்பதாகும்.
அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் ரத்தம் என்ற அரிய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின்போது 350 மி.லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.
இவ்வாறு தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 3 உயிர்களைக் காப்பாற்றும். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் தானம் செய்யலாம்.
ரத்த மையங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இத்தளத்தில் ரத்த தானமுகாம் மற்றும் ரத்த கொடையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம், பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுதோறும் ரத்தக் கொடையாளர்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்களை தமிழக அரசு பாராட்டி சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவித்து வருகிறது.
ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் ரத்தம் கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு தொடர் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும், செயலியும் ரூ.10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.
கடந்தாண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 சதவீதம் இலக்கை அடையவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வமாக ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.