மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்போன்று ஒருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் ‘நானே வருவேன்’ படத்தை பற்றி பேசப்போவதில்லை. ‘நானே வருவேன்’ படத்திற்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். என்ன.. ‘நானே வருவேன்’.. ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்கு இடையே ஒற்றுமையா?.. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!. நிச்சயம் இருக்கத்தானே செய்யும். ஏனெனில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகவும் யதார்த்தமான கேங்ஸ்டர் திரைப்படம். ஆனால், ‘நானே வருவேன்’ திரைப்படமோ ஒரு விதமான சைக்கோ த்ரில்லர், ஹாரர் வகை திரைப்படம். இந்த இரண்டு படங்களுக்கு இடையில் எப்படி ஒற்றுமை இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, இரண்டு படங்களின் கதையைப் பற்றி அல்ல. படம் எப்படி இருந்தது? அதில் பாசிடிவ் என்ன? நெகட்டிவ் என்ன? இந்த விஷயங்கள் இரு படங்களுக்கும் இடையே அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது. கதையாக பார்த்தால் ‘ஆளவந்தான்’ போன்ற படங்களுடன் ஒப்பிடலாம்.
மூன்று லெஜண்ட்களின் காம்போ!!
இரண்டு படங்களிலும் மூவர் கூட்டணி தான் அதிகபட்ச எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் + சிலம்பரசன் + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு மேஜிக் செய்திருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலும் அந்த மேஜிக் தொடரும் என்பது இந்த மூவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதேபோல், செல்வராகவன் + தனுஷ் + யுவன் சங்கர் ராஜா கூட்டணி ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ படங்களில் நம்மையெல்லாம் மிரட்டி இருந்தது. இந்த மூவரும் சேர்ந்தாலே ஒரு வித மேஜிக் நிகழும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மாஸ் இண்டர்வெல்!
‘வெந்து தணிந்தது காடு’, ‘நானே வருவேன்’ இரண்டு படங்களிலும் இண்டர்வெல் சீன் செம்ம மாஸ் ஆக இருக்கும். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிலம்பரசனுக்கு சூப்பரான சண்டைக்காட்சி வைத்திருப்பார்கள். சிலம்பரசன் துப்பாக்கி எடுத்த அந்த நொடியில் தியேட்டரில் விசில் பறந்தது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்திலும் இண்டர்வெல் காட்சி தெறியாக இருந்தது. கதிர் என்ற பெயரை ஒரு தனுஷின் மகள் சொன்னதுமே மற்றொரு தனுஷ் எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது ரசிகர்களின் கரவொலியால் திரையரங்கமே அதிர்ந்தது.
இரண்டு படங்களிலும் இண்டர்வெல் சீன் வரை படம் ஒருவிதமாக பிடிமானம் கொடுக்காமல் சென்று கொண்டே இருக்கும். சீன்கள் நன்றாக இருக்கும். ஆனால், படம் எதை நோக்கி போகிறது என்பதை இணைக்கும் பெரிய சீன்கள் இருக்காது. அதனால், அந்த இண்டர்வெல் சீன் மிரட்டலாக அமைந்தது.
மோசமான செகண்ட் பார்ட்!
இரண்டு படங்களிலும் முதல் பாதி ஏற்படுத்திய எதிர்பாப்பை பூர்த்தி செய்யவில்லை. முதல் பாதியில் வந்தக் காட்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டியதே இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள்தான். இரண்டாம் பாதி சொதப்பியது முதல் பாதியில் நன்றாக இருந்ததாக பீல் பண்ணியதை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் ஆக்கிவிட்டது. இரண்டுப் படங்களிலும் இரண்டாம் பாதியில் ரொம்பவே வீக்கான காட்சிகள் அதிகம் இடம்பெற்றன. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு டான் ஆக உருவாவதை ஜஸ்டிபை செய்யும் அளவிற்கு காட்சிகள் இடம்பெறவில்லை.
சில சீரியஸான காட்சிகள் கூட காமடி ஆகிவிட்டது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்தில் கதிர் கதாபாத்திரம் வரும் காட்சிகள் தெறிவிடுகின்றன. ஆனால், பின்னணியில் காரணங்கள் வலுவாக இல்லை. குறிப்பாக தன்னிடம் வம்பிழுத்த மூவரை அவர் கொலை செய்கிறார். அதுதான் முக்கியமான காட்சி. ஏனெனில் அவரது மகன் அந்த கொலைகளை பார்த்துவிடுவார். கதிர் கதாபாத்திரம் எதற்காக கொலை செய்கிறார் என்பதற்கு வலுவான காரணம் இல்லாததால் அந்த கதாபாத்திரம் மீது உருவான ஈர்ப்பு நீடிக்கவில்லை.
அதிருப்தியை கொடுத்த க்ளைமேக்ஸ்!
‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இரண்டாம் படத்திற்கு லீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சில காட்சிகளை வைத்து கௌதம் மேனன் முடித்து இருப்பார். அந்த க்ளைமேக்ஸ் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் ஒட்டாத நிலையில், க்ளைமேக்ஸ் நச்சென்று இருந்திருந்தால் நெகட்டிவ் எல்லாம் கூட பாசிட்டிவ் ஆகியிருக்கும்.
அதேபோல் ‘நானே வருவேன்’ படத்திலும் இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களுக்கும் இடையிலான சண்டை காட்சி அவ்வளவு வலுவாக இல்லை. ஒரு தனுஷ் கதாபாத்திரம் குறுக்கே வந்து கத்தி குத்து வாங்குவது, ஒரு தனுஷை மற்றொரு தனுஷ் தள்ளிக் கொண்டு மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் வீழ்வது, அதில் ஒருவர் மட்டும் மேலே வருவது என எல்லாமே அதர பழைய காட்சிகள். ரொம்பவுமே வொர்ஸ் க்ளைமேக்ஸ். கிட்டதட்ட ‘காதல் கொண்டேன்’ படத்தை போன்ற ஒரு சூழல் தான் ‘நானே வந்தேன்’ படத்தில். ‘காதல் கொண்டேன்’ க்ளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் இறக்கும் போது நமக்கு அந்த எமோஷனை அழகாக கடத்தி இருப்பார்கள்.
நடிப்பில் மிரட்டிய ஹீரோ.. இசை அசத்திய இசையமைப்பாளர்!
‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘நானே வருவேன்’ இரண்டு படங்களையும் தாங்கி நின்றது ஹீரோவின் நடிப்பும், பின்னணி இசையும் தான். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தன்னுடைய நடிப்பால் தோளில் சுமந்தார் சிம்பு. காட்சி அமைப்பு சரியில்லா விட்டாலும் சிம்புவின் அசுரத்தனமான நடிப்புக்காகவே அந்த காட்சி நம்மை ரசிக்கவைத்தது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடிப்பில் மிரட்டி இருந்தது. அதுவும் கதிர் கதாபாத்திரத்தில் அவ்வளவு ரியாக்ஷன்ஸ் இருக்கும். தன்னுடைய மகளுக்கு நேரும் துயரை எண்ணி வருத்தப்படும் அப்பாவாகவும் நம்மை கலங்க வைத்து இருப்பார். ஆனால், தனுஷும், சிம்புவும் நடிப்பில் வெரைட்டி காட்ட தயாராக இருந்து அதற்கான ஸ்கோப் படத்தில் இல்லை.
இரண்டு படங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையால் மிரட்டி இருப்பார்கள். பாடல்கள் நன்றாக இருந்தாலும் அதனைக் காட்டிலும் பின்னணி இசையால் காட்சிகளுக்கு உயிரூட்டி இருப்பார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வரும் ‘ஓஹஹோ..” என வரும் ஹம்மிங் எதோ ஒரு உணர்வை நமக்கு கொடுக்கும். ‘நானே வருவேன்’ படத்தில் ஹீரோவே பின்னணி இசைதான். படத்தின் உணர்வை அதாவது ஹாரர் பீலிங்கை நம்மை உணரவைத்து முதல் பாதியில் சீட் நுனியில் உட்கார வைத்திருப்பார். பின்னர் கதிர் கதாபாத்திரத்திற்கான வீரா தீரா பின்னணி இசை படத்திலும் மிரட்டலாக இருக்கும்.
இயக்குநர்களின் டச் எங்கே?
‘வெந்து தணிந்தது காடு’, ‘நானே வருவேன்’ இரண்டு படங்களிலும் முறையே இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவனின் டச் குறைவாகவே இருந்தது. அதாவது முந்தைய படங்களில் அவர்களுக்கு இருந்த ட்ரேட் மார்க் சம்பவங்கள் இந்த படங்களில் இல்லை. அதேபோல், ஸ்கிரீன் பிளேவில் இயக்குநர் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஒரு இயக்குநராக காட்சிகளை எலிவேட் செய்து அதில் ஒரு மேஜிக் செய்வது அவர்களின் கடைமை. ஆனால், இரு இயக்குநர்களும் அதனை செய்ய தவறிவிட்டனர். இரண்டு படங்களிலும் இரண்டாம் பாதியில் காட்சிகளில் ஒரு டெப்தும் இல்லை. மிகவும் மேலோட்டமான காட்சிகளாகவே இருந்தது.
தன்னுடைய வழக்கமான ஜானரில் ‘வெந்து தணிந்தது காடு’ இருக்காது என்று கௌதம் மேனன் தெரிவித்துவிட்ட போதும், ஒரு இயக்குநராக காட்சிகளை டீட்டைல் செய்து ஆழமான உணர்வுகளோடு மேக் செய்ய வேண்டுமல்லவா. அதனை தான் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பல டான்கள் வருகிறார்கள் ஆனால் ஒருவரையும் பார்த்தால் நமக்கு பயம் வரவில்லை. ஹீரோயினுக்கு இருக்கும் துயரமான சூழலும் நம் மனதை தொடவில்லை. இதெல்லாம் இயக்குநர்களின் கைகளில் தான் இருக்கிறது. அதேபோல் தான் ‘நானே வருவேன்’ படத்திலும் பழைய செல்வராகவனை காணவில்லை. சில காட்சிகளிலும் அந்த டச் இருந்தது. குறிப்பாக இண்டர்வெல் காட்சியில் தனுஷ் மகளை காட்டும் போது. அவர் முழுவதுமாக மற்றொரு கேரக்டரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அழகாக காட்டி இருப்பார். அதுவே படம் முழுக்க இருந்திருந்தால் படம் டெரராக வந்திருக்கும்.
இரண்டு படங்களுமே நன்றாக செட் ஆகியிருக்கும். கதையும் நமக்கு நெருக்கமாக வந்திருக்கும். ஆனால், டெப்த் அதிகம் இல்லாததால் இப்படி வீணடித்து விட்டார்களே என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால், இரண்டு படங்களுமே ஒருவித புது முயற்சிதான். ‘நானே வருவேன்’ ஒரு விதமான டிபிக்கல் ஹாரர் படம். ‘வெந்து தணிந்தது காடு’ ஒருவித ரியலிஸ்டிக் படம். இரண்டிலும் ஹீரோயிசம் மிகக் குறைவு. அது உண்மையில் வரவேற்கத்தக்கதே.
‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டார்கள். அதேபோல், ‘நானே வருவேன்’ படத்திலும் க்ளைமேக்ஸில் இரண்டாம் பாகத்திற்கான டுவிஸ்ட் வைத்தே முடித்திருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் வரும் போது எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.