உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன்.
கோசைங்கன்ஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரமேஷ் சந்திர ராவத்(50) என்ற விவசாயி அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டிற்கு பக்கத்திலேயே வசிக்கும் அவருடைய மகன்களான அவதேஷ்(29) மற்றும் ரஜ்னேஷ்(25) இருவரும் தனது தந்தையை யாரோ கொலைசெய்துவிட்டதாகவும், முன்பகை காரணமாக உள்ளூர்வாசிகளில் யாரோ இதை செய்திருக்கலாம் எனவும் போலீசில் புகாரளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவதேஷின் வீட்டில் ரத்தக்கறைகள் படிந்திருந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். அதன்பேரில் வீட்டாரை விசாரித்தபோது, ரமேஷின் மகள் ரேணு உண்மையை உடைத்துள்ளார். தனது சகோதரர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு தந்தையை கொலைசெய்ததை கூறியுள்ளார்.
தனது தந்தைக்கு மதுபழக்கம் இருப்பதாகவும், மேலும் அவருக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடிக்காது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தனது சகோதரர அவதேஷுக்கு பெண் குழந்தை பிறந்ததால் வீட்டில் அவர் தொடர்ந்து சண்டையிட்டதாகவும், ஒரு கட்டத்தில் குழந்தையின் கழுத்தை நெறித்து ரமேஷ் கொலைசெய்ய முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவதேஷ் தந்தையின் கழுத்தை அறுத்து கொலைசெய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கொலைவழக்கு பதிவுசெய்த போலீசார் சகோதரர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM