சென்னை: தமிழகத்தில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிக அளவு மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையைத் தான் இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பியிருக்கின்றனர். இதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியது. தென்மேற்கு பருவ மழையானது கடந்த மே 16-ம் தேதி தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி தற்போது தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும். தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 11 மாவட்ட மிக அதிக மழையும், 16 மாவட்டங்களில் அதிக மழையும், 9 மாவட்டங்களில் இயல்பான மழையும், 4 மாவட்டங்களில் குறைவான மழையும் பதிவாகி உள்ளது.