30 நாட்களில் மூன்று படங்கள் ரிலீஸ் : ஆச்சர்யமூட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக திரையுலகில் அடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி இசையமைத்து வந்த இவர், ஒருகட்டத்தில் பாலிவுட் சென்ற பின்னர் இந்திய அளவில் பிரபலமாகி அங்கேயே தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் அவரது இசையமைப்பில் தமிழில் வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியானால் அதுவே ஆச்சரியம் என்கிற நிலை தான் கடந்த வருடம் வரை இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான நான்கு தமிழ் படங்கள் கடந்த இரண்டு மாதங்களில் வெளியாகி உள்ளன. அதிலும் ஜூலையில் வெளியான பார்த்திபன் நடித்த இரவின் நிழல் படத்தை தவிர்த்து பார்த்தால், ஆகஸ்ட் 31ல் வெளியான கோப்ரா, செப்டம்பர் 15ல் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் உட்பட முப்பது நாட்களுக்குள் 15 நாட்கள் இடைவெளியில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் இசையமைத்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது என்பது அவரது இசை பயணத்தில் இதுவரை நிகழ்த்திராத சாதனை என்றே சொல்லலாம்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவரது இசையமைப்பில் மாரி செல்வராஜ் உதயநிதி கூட்டணியில் மாமன்னன் என்கிற படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.