மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை போன்ற கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, ‘பொன்னியின் செல்வன்’ கதை மாந்தர்களின் பெயர்களைக் கொண்ட சிலரைத் தேடினோம்.
மத்திய ஆட்சிப் பணியின் ஐ.ஐ.எஸ் பிரிவு அதிகாரியாக இருக்கும் பொன்னியின் செல்வனிடம், அவரின் பெயர்க்காரணம் குறித்துப் பேசினோம்…
“என் பெற்றோர், திருச்சி மாவட்டத்தைச் சேந்தவங்க. எங்கம்மாவுக்குப் பிரசவவலி ஏற்பட்டபோது, கார் மூலமா அவரை முசிறியிலிருக்கிற ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போயிருக்காங்க. காவிரி நதிக்கரை வழியா போயிட்டிருக்கும்போது கார்லயே நான் பிறந்திருக்கேன். அப்பா தமிழாசிரியர். என் அக்காவுக்கு ‘முத்தமிழ் செல்வி’னு பெயர் வெச்ச அப்பா, அதேபோல எனக்கும் சங்கத்தமிழ்ல பெயர் வைக்கணும்னு ஆசைப்பட்டிருக்கார். மகிழுந்துப் பயணத்தின்போது நான் பிறந்ததால, ‘மகிழன்’னு பெயர் வைக்க அவர் திட்டமிட்டிருக்கார்.
அப்பாவின் நண்பர்கள் பலரும் தமிழ் மொழிமீது அதிக பற்று கொண்டவங்க. அவங்கள்ல பலரும், ‘பொன்னியின் செல்வன்’னு எனக்குப் பெயர் வைக்க ஆலோசனை கொடுத்திருக்காங்க. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் எங்கப்பாவுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனாலதான், அந்த நாவலின் பெயரையே எனக்கு வெச்சார். 2012-ம் வருஷம் சிவில் சர்வீஸ் தேர்வுல நான் வெற்றி பெற்றேன். அதுல, ஐ.ஐ.எஸ் (Indian Information Service) பணி எனக்குக் கிடைச்சது. அந்தத் தேர்வுக்குத் தயாராகவும், வெற்றி பெறவும் தமிழ் மொழி எனக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு.
பதிப்பகத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறைகள்ல வேலை செஞ்ச நிலையில, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தமிழகப் பிரிவுக்கு இப்போ செய்தித்தொடர்பாளரா இருக்கேன். என் சிவில் சர்வீஸ் துறை வேலையிலயும் தமிழும் இலக்கியமும் முக்கிய அங்கமா இருக்கு” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பொன்னியின் செல்வன்.