உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பது ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தை மீறும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்டை நாடான ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. சுமார் 7 மாதங்களாக நடைபெற்று வரும் போர் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையில் கோலகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது.
ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும். அவற்றை மக்கள் விருப்பத்தின் உண்மையான வெளிப்பாடு என்று அழைக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.