ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். “மாமனிதன் வைகோ என்கிற படம் திருச்சியில் திரையிடப்பட்டுள்ளது. பெரம்பலூர், கோவை தென் மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த இயக்கத்திற்காக உயிர் விட்டவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்த படம் அவர்களுக்குச் சமர்ப்பணமாக அமையும்.
தேச பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பா.ஜ.க-வுடன் தொடர்பு உள்ள ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கு என்ன காரணம்.
இந்த அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் அரசிடமே உள்ளது. அப்படி இருந்தும் அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது என்ன காரணமாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.
அண்ணன் தம்பிகளாகப் பழகும் இந்து முஸ்லிம்கள் இடையே வேற்றுமையை உருவாக்கி, வாக்கு வங்கியை நிரப்ப சில சக்திகள் முயல்கிறார்கள். அதற்கு நாம் வழி வகுத்துவிடக்கூடாது. நாம் சுமுகமாக வாழ நினைத்தாலும், இது போன்ற சில அமைப்புகள் நம்மை பிளவுபடுத்தி நம்மை ஆள நினைக்கிறது.
இதனை ஒரு போதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதே போல், தமிழக மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் கடுமையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக உறுதுணையாகவும் மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க இந்த இயக்கம் முதல்வருக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும்” என்றார்