தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அக்டோபர் 12ஆம் தேதி அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சி நாங்கள்தான் என பாஜகவினர் கூறி வரும் நிலையில், நாள்தோறும் மீடியாக்களை சந்தித்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் அண்ணாமலை, திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும், பாஜக மேலிடத்தின் அனுமதியை பெற்று அவர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், ‘இரண்டு வார கட்சி பயணமாக அண்ணனும் நானும் அமெரிக்கா செல்கிறோம்’ என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையில் அமெரிக்க பயணம் அரசியல் பயணமா அல்லது உயர்கல்விக்காகவா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அரசியல் தொடர்பாக சில விஷயங்களை கற்றுக் கொள்ள அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அமெரிக்க வாழ் தமிழர்களையும் இந்த பயணத்தின்போது அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அண்ணாமலை, இலங்கை சென்றார். யாழ்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அவர், ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றது முதலே இலங்கை தமிழர் விவகாரத்தில் அண்ணாமலை தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் முதன்முறையாக அவர் கலந்து கொண்டிருந்தார். ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீதும்,
மீதும் இன்றளவும் பலருக்கும் அதிருப்தி நிலவி வருகிறது. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஈழத்தமிழர்களை வைத்து உடைக்கும் முயற்சிகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விவகாரமும், இலங்கை போரின்போது நடைபெற்ற கசப்பான விஷயங்களும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. அதனை சரிசெய்யும் முயற்சிகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். முகாம் வாழ் தமிழர்களுக்கான பல்வேறு திட்டங்களையும் திமுக அரசு முன்னெடுத்து வருகிறது. இவை திமுகவுக்கு ஆதரவாக வாக்கு வங்கியை பலப்படும் என்பதால், இலங்கை தமிழர் விவகாரத்தில் அண்ணாமலை கூடுதல் அக்கறை காட்டுவதாக தெரிகிறது.
இந்த பின்னணியில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களையும், தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் அமெரிக்காவில் சந்தித்து பேசும் அண்ணாமலை, அங்கிருந்து திரும்பியதும் தமிழகத்தில் இலங்கைக்கான அரசியலை முன்னெடுப்பார் என்கிறனர்.