எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க தொடங்கின. பலர் குடும்பத்துடன் சென்று முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடிவருகின்றனர்.
மேலும், நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி மணி கலக்கியிருக்கிறார் எனவும் பலர் கூறிவருகின்றனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம் கோலிவுட்டிலிருந்து இந்திய அளவில் உருவாகியிருக்கும் ஒரு மைல் கல் எனவும் போற்றிவருகின்றனர்.
அதேசமயம், பொன்னியின் செல்வன் படத்தை படித்தவர்களில் சிலருக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பொதுவாக நாவல் படித்தவர்களுக்கு எந்தப் படமும் திருப்தி தராது என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு ..ஆனால் ஏனோ ருசிக்கவில்லை…ரசிக்க இயலவில்லை. ஆடம்பர இசை …. எத்தனையோ வாத்தியங்கள்…. ஒன்றில்கூட தமிழில்லை. அதனால் ஒட்ட முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஆடம்பரமான விருந்து …ரகரக உணவு …. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை… ரசிக்க இயலவில்லை.
ஆடம்பர இசை …. எத்தனையோ வாத்தியங்கள்…. ஒன்றில் கூட தமிழில்லை.
அதனால் ஒட்ட முடியவில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) September 30, 2022
கஸ்தூரியின் இந்த ட்வீட் ட்விட்டரில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொன்னியின் செல்வனை கஸ்தூரி வேண்டுமென்றே குறை சொல்கிறார். ஒட்டுமொத்த கோலிவுட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது இப்படி பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகவே அவர் இப்படி ட்வீட் செய்கிறார் எனவும் நெட்டிசன்ஸ் கலாய்த்துவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை சிறப்பாக இருக்கும்போது இசையில் தமிழ் இல்லை என கூறியிருப்பதன் மூலம் ரஹ்மானையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். மேலும் இதன் மூலம் வைரமுத்து இல்லாததை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறாரா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.